Tuesday 20 December 2011

இந்தமுல்லைப் பெரியாறு பட்டாசு வெடிக்குமா!!!!..இதிலாவது தமிழினம் ஒன்று சேருமா ??

பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது தமிழகம். முல்லைப் பெரியாறு தண்ணீர் தென் தமிழக மக்களின் வாழ்வாதாரம். இருக்கின்ற அத்தனை பிரம்மாஸ்திரத்தையும் ஏவிக் கொண்டிருக்கிறது கேரளா. இங்கே விஜய் டிவி ரஜினி பிறந்தநாளை ஆரவாரமாய்க்  கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

ஒரு மிகச் சிறந்த சினிமா வியாபாரியான ரஜினி தான் உண்டு தன்  வேலை உண்டு என்று இருப்பவர். தன் படம் வெளியாகும் சில நாட்களுக்கு முன்பு மட்டும் தான் அவருக்குத் தமிழக மக்களும், ரசிகர்களும் ஞாபகத்திற்கு வருவார்கள். ஏதாவது ஒரு பாடல் வெளியீட்டு விழாவில் தமிழர்களை உசுப் பேற்றும்படியான தன் வழக்கமான வியாபார உத்தியை வார்த்தை சித்து விளையாட்டில் காண்பிப்பார். இந்த விளம்பரம் அவருக்குப்  போதுமானது. ஒட்டு மொத்த தமிழகமும் அவர் நடித்து வெளி வரும் படத்தை வெள்ளி விழா படமாக்கி விடும். ஒவ்வொரு முறையும் இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் இவர் மௌன விரதம் மட்டுமே இருப்பார். அல்லது தமிழகத்தில் இல்லாமல் இமயமலையில் இருப்பார். தமிழர்கள் ஒரு அரசியல் அனாதைகள். காப்பாற்ற ஒருவரும் இல்லை.
எந்த தேவலோக இளவரசனும் நம்மைக் காப்பாற்ற வரமாட்டான். விழித்தெழு தோழா...விழித்தெழு.....


தமிழர்களே!! தமிழர்களே!!!...நம்மைச் சுற்றித்தான் எத்தனை எத்தனை அரசியல்கள். நம்மை திசை திருப்பும் முயற்சியில் ஆயிரம் ஆயிரம் காரணிகள். இனியாவது விழித்துக் கொள்வோம்....நாயர் கடை டீ குடிக்க மாட்டேன் என்று சத்தியப் பிரமாணம் எடு.  வியாபாரம் இழந்த தமிழக கேரளா மக்கள் தாமாக முன் வந்து சண்டித்தனம் செய்யும் சண்டியிடமும், அச்சுதானந்திடமும் தண்ணீர் விட அப்பவாவது சொல்லுவார்களா? .......

தமிழா உன் பணம் மட்டுமே வந்தேறிகளுக்கு வேண்டும்....அவர்களின் பணப் பையை நிரப்ப உன் மறதி ஒன்றே போதுமே !!!!

 இந்தமுல்லைப் பெரியாறு பட்டாசு வெடிக்குமா!!!!..இதிலாவது தமிழினம் ஒன்று சேருமா ??

Tuesday 25 October 2011

மெதுவாப் போங்க சார்!

எங்கேயும் எப்போதும் படம் பார்த்தேன். நீண்ட நாட்களுக்குப் பின்பு நல்லதொரு படம் பார்த்த திருப்தி. வாழ்க்கையில் நாம் காணும் சின்ன சின்ன உணர்வுகளைக் கூட பதிவு செய்திருப்பது நன்றாயிருந்தது. ஒரு பெரிய ஹீரோ வந்து ஒபெனிங் சாங் குடுக்காமல், புதுமுகங்களை நம்பி படம் எடுத்திருப்பது கதைக்கு வலுவூட்டுகிறது. 
வெட்டியான பாட்டுக்கள் இல்லை. அதற்காக வெளிநாடு சென்று 
தயாரிப்பளருக்கு செலவு வைக்கவும் இல்லை.  இந்த மாதிரி படங்களை நடிப்பே தெரியாத விஜயும், அஜீத்தும் பார்த்தாவது திருந்துவார்களா? சினிமாவிற்கு என்றுமே கதைதான் ஹீரோ. எந்த ஹீரோவிற்காகவும் கதைகள் இல்லை. அதை மக்கள் ரசிப்பதும் இல்லை.

ஒரு பொழுதுபோக்கு படத்திலும் கூட  சிலரால் மட்டுமே மெசேஜ் சொல்ல முடியும். பல கோடி படம் போட்டு படம் எடுக்கும் ஷங்கரின் என்திரனில் ஒரு புண்ணாக்கு மெசேஜும் இல்லை.

ஜப்பானில் சுனாமி வந்து ஒரு லச்சத்தி ஐம்பதனாயிரம் பேர் இறந்து போனார்கள். உலகம் முழுவதும் அதற்காக கண்ணீர் வடித்தார்கள். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு சாதாரணமாக
2 லட்சம் பேர்கள் சாலை விபத்தில் மரணமடைகிறார்கள். இதற்காக இந்திய அரசு குறைந்தபட்சம் ஒரு 6 மாதத்திற்கு ஒருதடவையாவது சாலை விழிப்புணர்வு முகாம் நடத்தாதது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் சாலைகளே இல்லை. அது வேறு விஷயம். ஆனால் ஓட்டுனர் உரிமம் கொடுக்கப்படும் முறை கேலிக்கூத்தானது. லஞ்சத்தால் கொடுக்கப் படுவதால் முறையாகப் பயிற்சி எடுக்காதவர்கள் சாலையில் சென்று பிறருக்கும் விபத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஓட்டுனர் உரிமம் கொடுப்பதில் கடுமையான சட்டம் பின்பற்ற வேண்டும்.
6 மாதம் ஒருமுறை முகாம் பயிற்சிகளில் கட்டாயம் கலந்து கொள்ளவைக்க வேண்டும். இந்திய சாலைகளில் அதுவும் bye pass சாலைகளில் செல்பவர்களுக்கு நிச்சயம் உயிர் உத்திரவாதம் கிடையாது.  இதை ஒரு மெசேஜாக ஒரு படம் எடுத்திருப்பது மிக மிக அவசியமான ஒன்று. புளிமயமரமாகப் போய் லாரியை தலைகீழாக நிறுத்துகிறவர்களுக்கும்   குடும்பம் என்று ஒன்று இருக்கிறது.
திருந்த செய்யுமா எங்கேயும் எப்போதும்?

Wednesday 21 September 2011

உண்ணாவிரத மேனியாக்களும் ஊடகங்களின் ராஜதந்திரங்களும்!


ஒவ்வொருத்தரும் வீட்டில் கோபித்துக்கொண்டோ , உணவில்லாமலோ   இருந்தால் சாப்பிடாமல் தான் இருப்பார்கள். இன்னும் சிலபேர் வீட்டில் உணவிருந்தும் உணவகங்களில் சாப்பிடுவதையே விரும்புவர். சில உணவங்காடிகளின்  ருசி வீட்டில் சாப்பிடுவதையே தவிர்க்க வைக்கும், சுண்டி இழுக்கும். ஆனால் இன்று இந்தியாவில் உண்ணா விரதம் என்கின்ற பெயரில் அரசியல்வாதிகள் செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய்   விட்டது. 

வயிறு நிரம்ப சாப்பிட்டவன் அதை சரிக்கட்டவும், நோயாளிகளுக்கு நோய் விரைவில் குணமாகவும் நம் முன்னோர்களால் கண்டறியப்பட்டு பின் அதை ஆன்மிகம் தத்தெடுத்துக் கொண்ட வழியே உண்ணாவிரதம். தனி ஒருவன் நன்மைக்காக மனிதன் கண்டு பிடித்த வழி இன்று சுய தம்பட்டம் அடிக்க மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

அண்மையில் உண்ணா விரதத்தினால் அண்ணா ஹசாரேவும், பாபா ராம் தேவும்  இந்தியாவின் பட்டி தொட்டியெங்கும் விளம்பரப் படுத்தப்பட்டார்கள். 

குஜராத் என்ற மாநில அளவில் முதல்வராக இருக்கும்  மோடி என்கின்ற தனி மனிதர்  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு அடுத்த பிரதமராகும் வாய்ப்பு இருப்பது ஊடகங்களின் வாயிலாக மிகைப்படுத்தப் படுகிறது. சமயம் பார்த்துக் காத்திருந்த மோடியும் இந்த வாய்ப்பை சும்மா விடுவாரா? அவரும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறார். 
 3 நாள் விரதக் கூத்து நடந்து முடிந்தாயிற்று. உலக சமாதானத்திற்காக இந்த விரதமாம்!

மோடி நினைத்தது நடந்தது. விளம்பரமும் செய்தாயிற்று. அடுத்த பிரதமருக்கான விளம்பரம் மக்களை நன்றாகவே சென்றடைந்தது. 

நிர்வாகத்திறமை மிக்கவர் என்று சொல்லப் படுபவர் உண்ணா விரதம் இருந்துதான் தன் பெயரை விளம்பரப் படுத்திக் கொள்ளவேண்டுமா? 
ஊடகங்கள் மட்டும் விளம்பரம் செய்யாமல் இருந்திருந்தால் கடைக்கோடி இந்தியனிற்கும்  இது தெரிய வருமா? வட இந்தியன் உண்ணா விரதம் இருந்தால் ஊடகத்தில் விளம்பரம்.  தென்னிந்தியன் இருந்தால் கண்டுகொள்ளாமல் சாக வைப்பது. இது வட இந்தியர்களுக்கு சகஜமான ஒன்று.

வட இந்தியர்கள் மட்டுமே ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆளத் துடிக்கிறார்கள். காலம் காலமாக இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.  தென்னிந்தியாக்கள் வரி வசூல் செய்யப்படும் சுங்கச்சாவடிகளா என்ன?
இந்தியாவின் ஒட்டு மொத்த வரியில் முக்கால்வாசி வருமானத்தை ஈட்டிக் கொடுப்பது தென்னிந்தியர்கள்தாம். வட இந்தியனை முதலில் ரயிலில் பயணம் செய்யும்போது பயணச்சீட்டு வாங்கச் சொல்லுங்கள்! பிறகு நாட்டை ஆளுவதைப் பற்றி யோசிக்கலாம். !!!

Saturday 20 August 2011

கொஞ்சம் கண்டு பிடித்து கொண்டுங்க சார்!


 இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏராளமானோர்  சென்று வருகிறார்கள். கல்வி கற்க, வேலை வாய்ப்பிற்காக, சுற்றுலா, பொழுது போக்கு, மருத்துவ சிகிச்சை என காரணங்கள் ஆயிரம் பல. சென்றவர்கள் வியந்து பேசுகிறார்கள். வழுக்கும் சாலைகள் . வானளாவிய கட்டிடங்கள். நேர்த்தியான மக்கள்.

எல்லாம் சரி ! இங்கே என்ன பணமா இல்லை. ஒரு தாய்லாந்து, பிலிப்பைன்சை விடவா நம்மிடம் பணம் இல்லாமல் போய் விட்டது. நமது அரசாங்கம் அமெரிக்கா அளவிற்கு சம்பாதிக்கிறது. லில்லிபுட்  (ரொட்டித்துண்டு) அளவிற்கே நலத் திட்டங்களுக்கு செலவிடுகிறது. 

நம்ம ஊர் சினிமாக்காரர்கள் மட்டும் இல்லையென்றால் நமக்கு அமெரிக்காவையும் தெரியாது. மச்சு பிட்சுவையும் தெரியாது.  வெளி நாட்டில் கனவு பாடல்கள் வைத்து நம்மை எல்லாம் அங்கே சுற்றி காமிக்கிறார்கள். 

வாழ்க தமிழ் சினிமா! வெல்க தமிழ்  சினிமா! 

நமது நாடும் ஏன் பிற நாடுகள் மாதிரி அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. மக்கள் தொகை ஒரு பிரச்சனை. எல்லா மக்களுக்கும் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட முடியாது என்று அரசு சொல்லுமானால்!  சீனா  நம்மை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடு. அதனால் மட்டும் எப்படி சாத்தியமாயிற்று.  ஒரு ஒலிம்பிக்கைக் கூட நடத்தி முடித்து அந்த நகரத்தையே மக்களுக்கு சுற்றுலாத் தலமாக்கி அர்ப்பணித்திருகின்றது. அதுவல்லவா நாடு! அதுவல்லவோ அரசாங்கம்!
நம்மூரில் இன்னமும் காமன் வெல்த் போட்டி முடிந்தும் கூட முறைகேடுகள் பற்றிய பேச்சுக்களும், சலசலப்பும் முடிந்த பாடில்லை. இது முழுக்க முழுக்க அரசின் தவறே. ஒரு விளையாட்டுப் போட்டியை கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத அரசு எப்படி ஒழுங்காகஆட்சி செய்யும். மக்களுக்குத் 
தேவையானதை எப்படிசெய்து தரும்? தராதவர்களை என்ன செய்யலாம்? தரக்கூடியவர்கள் யார்? கொஞ்சம் கண்டு பிடித்து கொண்டுங்க சார்!.










Saturday 13 August 2011

தயவு செய்து யாராச்சும் பீஸ் கட்டய போடுங்கப்பா!


இந்திய மக்கள் தொகையைப் பற்றி யாராவது கவலைப் படுகிறார்களா என்றால் யாரும் இல்லை என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஏழை, சாதாரண நடுத்தர வர்க்கம், மேல் தட்டு மக்கள் என்று யாவருக்குமே அக்கறை இல்லாமல் தான் சென்று கொண்டு இருக்கிறது நிலைமை. 

மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் வரியை பிடுங்கும் அரசாங்கமோ  மக்கள் தொகை அதிகரித்தால் இன்னும் அதிகமாக வரியைப் பிடுங்கலாம்   என்ற உயரிய எண்ணத்தில் உறுதியாக இருக்கின்றது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசிடம் எந்த ஒரு உருப்படியான திட்டமும் இல்லை. 

 மக்கள் சுய சிந்தனை செய்து எப்பொழுது நாட்டை காப்பாற்றப் போகிறார்கள். 
மக்கள் தொகைப் பெருக்கத்தால் 

உணவுப் பற்றாக் குறை!
கல்வியின்மை !
வேலை வாய்ப்பின்மை!
நகர நெரிசல் , இட நெருக்கடி!
போக்குவரத்து பிரச்சினை!
தண்ணீர்ப் பற்றாக்குறை!
எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விடாது. வசதி இருப்பவன் எல்லாவற்றையும் அனுபவித்துக் கொள்வான். இல்லாதவன் ? நிச்சயம் கொள்ளை தான் அடிப்பான். ஒரு திருட்டுக் கும்பலை நமக்குத் தெரியாமலே நாம் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

 கூட்டம் கூட்டமாக இருந்தால் தான் நம் பேச்சு சபை ஏறும் என்ற காலம் மலையேறி விட்டது. தரமான மக்கள் இருந்தால் தரணி நம் புகழ் பாடும். இஸ்ரேல் மக்கள் மிகச்சிறந்த உதாரணம். 

இந்த பாழாய்ப் போன அரசு இரவு மின்வெட்டை வேறு அதிகப் படுத்தி விட்டது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு இது மிகப் பெரிய காரணம். எது எப்படி இருந்திருந்தாலும் மக்கள் கொஞ்சம் சிந்தித்து இருந்தாலும் எப்பொழுதோ நம்
கட்டுப்பாட்டினுள் இந்த மக்கள் தொகைப் பெருக்கத்தை கொண்டு வந்திருக்கலாம். 

  கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். நம் நாட்டில் மட்டும் மக்கள் தொகை குறைவாக இருந்திருந்தால் எல்லோருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு என்று
அற்புதமான நாடாக இருந்திருப்போம். இன்னும் வளர்ந்திருப்போம். 
வருங்கால வாரிசுகள் வளமாக வாழ சிந்தியுங்கள் மக்களே! 


Thursday 28 July 2011

பேஸ் புக்கில் பேச்சைக் குறைங்கப்பா!

கணினியில் அதிக நேரம் செலவிடுவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிக நேரம் இமைக்காமல் பார்ப்பதால் கண்ணில் இயற்கையாக சுரக்கும் திரவம் வற்றிப் போய் கண் எரிச்சல் அதிகமாகிறது. எவ்வளவு நேரம் தூங்கினாலும் இன்னும் கொஞ்ச நேரம் தூங்க வைத்து சோம்பேறியாக்குவது   இந்த வகையான குறைபாடுகளில்னால்தான்.

ஒரே இடத்தில் அதிகப்படியான நேரம் அசையாமல் அமர்வதினால் ( நாம் தான் வேலை என்று வந்து விட்டால் புலி ஆயிற்றே) கால்களுக்கு சரியான ரத்த ஓட்டம் பாய்வதில்லை. இதனால் சிறு வயதிலேயே கால் வீங்கி பெரிய அளவில் பாதிப்பு வருகிறதாம். இதற்கு என்று தனியாக வியாதி பேர் சொல்கிறார்கள். 

இருக்கையில் நாம் அமரும் விதத்தால் முதுகு வலி வருகிறது. எப்படியும் அதிக நேரம் ஒரே மாதிரியாக நம்மால் உட்கார்ந்து வேலை செய்ய முடியாது.   
மாற்றி அமரும் காரணத்தினால் முதுகு தண்டு பலமாக பாதிக்கப் படுகிறது. 

எப்பொழுதுமே கீ போர்டை தட்டிக் கொண்டே இருப்பதால் விரல்களும் வெகு சீக்கிரமே சோர்வடைந்து விடுகின்றன. இப்படி இருந்தால் வீட்டில் எப்படி வெங்காயம் தோலுரிப்பது? 
ஒரு நாளிற்கு சராசரியாக நாலு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமாம். எனக்கு தெரிந்து கணினியில் வேலை செய்பவர்கள் சாப்பிடும்போது மட்டுமே தண்ணீர் பருகுகிறார்கள். மருத்துவர்கள் அறிவுரைப்படி சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் அரைமணி நேரத்திற்கு தண்ணீர் அருந்தக்கூடதாம்.

இன்னும் இங்கே பகிர்ந்து கொள்ள முடியாத வியாதிகள் ஆணிற்கும், பெண்ணிற்கும் வருகிறதாம். இது எல்லாம் மருத்துவர்கள் ஊடகங்களில் நாள்தோறும் அறிவுறுத்திக் கொண்டே இருக்கும் ஒரு எச்சரிக்கை மணி. 

என்ன செய்வது? பில் கேட்ஸ் என்று ஒரு சாமானியன் எல்லாரையும் கணினி பயன்படுத்த வைத்து விட்டாரே. இப்பொழுது நாமாக நினைத்தாலும் விலக முடியாத ஒன்று இந்த கணினியின் இறுகுப் பிடியும்தான்.

சரி இதற்கான தீர்வுகளில் சிலவற்றைப் பார்ப்போம். 

1. தொடர்ந்து கணினியையே வெறித்துக் கொண்டு பார்க்காமல் சில வினாடிகளுக்கொருமுறை கண்களை இமைத்துக் கொள்வோம். நமக்காக இல்லவிடினினும் நம் கண்ணான கண்மணி பாபபாவிற்காக.

2 .அரைமணிக்கொருதரம் இருக்கையை விட்டு எழுந்து சிறிது காலாற நடந்து வரலாம்.(எல்லாம் நம் மேலதிகாரி அல்லது முதலாளிக்குத் தெரியாமல் தான்)  

3 . 4 லிட்டர் தண்ணீர் குடிக்க முயற்சிப்போம். அதனால் அடிக்கடி கழிவறை சென்று வரலாம்.

4 . நல்ல இருக்கை வாங்கி தரச்சொல்லி நம் மேலதிகாரியிடம் முறையிடலாம். அவர் வேலையை விட்டு நம்மை தூக்கி விடாதபடி பக்குவமாக சொல்ல முயற்சிப்போம். 

5 முடிந்த அளவு நம் தகுதியை உயர்த்திக் கொண்டு நமக்கு ஒரு இளம் உதவியாளரிடம் எல்லா வேலைகளையும் தள்ளி விடும் அளவிற்கு நம் தகுதியை வளர்த்திக் கொள்வோம். இதனால் நம் வேலைப் பளு குறையும் என்று நாம் நம்புவோமாக. 
இந்த கட்டுரை எல்லா முதாலாளி மற்றும், தொழிலாளிகளின் உடல் நலனை கருத்தில் கொண்டு  எழுதப் படுவது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
எனவே யாரும் யாரையும் எதற்காகவும் வஞ்சம் தீர்க்க வேண்டாம்.

பேஸ் புக்கில் பேச்சைக் குறைங்கப்பா!








Wednesday 27 July 2011

பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள். வெறும் நூறு ரூபாயில் படம் பார்த்து விட்டு அதற்கு விமர்சனம் எழுதுவது தவறு என்றே படுகிறது. அதுவும் தவிர சினிமா பற்றிய பல கருத்துக்கள். இது தான் நல்ல சினிமா என்பதற்கு ஏகப்பட்ட பார்முலாக்கள். ஹாலிவுட் படங்கள் மாதிரி தமிழ் படங்கள் இல்லை என்று வேறு.   இல்லை இல்லை இது தான் எங்கள் கலாச்சாரம் என்று சப்பைக்கட்டு  சொல்லும் ஒரு கோஷ்டி.  தலை சிறந்த இயக்குனர்கள் மட்டுமே படங்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. அது சரி யார் அந்த இயக்குனார்கள்? இந்த இயக்குனர் எப்படி என் படங்களை விமர்சனம் செய்யலாம்? அவர் எடுத்த படங்களின் இலட்சணம் தெரியாதா என்று  படம் எடுத்தவர் குமுறலாம். ஒரு வேளை ரசிகர்கள் மட்டுமே படங்களை விமர்சனம் செய்யலாம் என்று விட்டு விடலாமா? ஏன் என்றால் ஒரு படத்தை ஆராதித்து ஓட வைக்கும் தகுதியும் அதை ஒரே வாரத்தில் திரை அரங்கை விட்டு தூக்கும் சக்தியும் சாமானிய ரசிகனுக்கே உள்ளது.

சாதுர்யன்

சாதுர்யன்

Wednesday 20 July 2011

நேற்று ஜம்போ சர்கஸ் சென்று இருந்தேன். 

வலிகள் நிறைந்த வாழ்க்கை. ஒருவேளை சாப்பாட்டிற்காக உயிரையே பணயம் வைக்கும் வேலை. மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டுவதே அவர்கள் பிழைப்பு. அவர்கள் வாழ்வே வேடிக்கை. பார்வையாளர்கள் கை தட்டினாலும், தட்டாவிட்டாலும் முகத்தில் புன்முறுவலுடன் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். சிறிது கூட நடுக்கம் இல்லை. அவசரம் இல்லை. perfection 100 % இருந்தால் மட்டுமே சாத்தியம். 

எத்தனை கலைஞர்கள். எவ்வளவு கட்டு கோப்பான ஒருங்கிணைந்த வேலை. எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் சாதாரண அலுவலக வேலை செய்வதற்கே ஆள்  கிடைப்பதில்லை, பற்றாக்குறை, வேலையாட்கள் ஒற்றுமையில்லை  என்ற புலம்பல். இங்கோ தலைகீழாக தொங்குவதற்கு கூட ஆட்கள் இருக்கிறார்கள். அசாத்திய திறமைகள். பெண்கள் அதிக சதவிகததில்  இருக்கும் துறை சர்கஸ் மட்டுமாகத்தான் இருக்கும் போலும். சத்தியம் செய்யலாம்.  அந்தரத்தில் அவர்கள் ஆடும்போதெல்லாம் சாகசக்காரிகள் மனதை கொள்ளையடித்தார்கள்.எத்தனை முறை பார்த்தாலும் சாகசங்கள் சலிப்பதில்லை. நாமெல்லாம் வாழ்வதே சாகசம் என்று இருக்கும் போது (விலைவாசி எக்குதப்பா ஏறிடுசுப்பா ) இவர்கள் தங்கள் வாழ்க்கையையே சாகசமாகி கொண்டிருக்கிறார்கள். 

மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர்களுக்கு கிடைக்கும் கூலி நிச்சயம் குறைவுதான். ஆனால் அதற்காக  இவர்கள் சாகசத்தில் துளி கூட குறை இல்லை. நெஞ்சம் நினைத்தது நம்மூர் தொழிலாளிகளை பற்றி. 

தனி மனித திறமைகளுக்கு எல்லையே கிடையாது. ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்பு குழுவினர்களுடன் வரிசையாக செல்லும் பாங்கு நம்மவர்கள் இன்னும் கற்றுக்கொள்ள மறுப்பது. செய்யும் வேடிக்கையில் காட்டும் நேர்த்தி ஆஹா நாம் இன்னும் நம் வேலையே நேர்த்தியாக செய்யவேண்டும் என்று எனக்கு உணர்த்தியது.  எல்லாவற்றியும் விட தாங்கள் செய்யும் வேலையை  மகிழ்ச்சியாக செய்கிறார்கள். செய்த வேலை திருப்தி என்கின்ற மன நிறைவை அவர்கள் சொல்ல வேண்டியதில்லை. பார்வையாளர்கள் கைதட்டல்கள் அவர்களை வழியனுப்புகின்றது. நம் பணியில் சாத்தியமா என்று உள்மனது போராடியது.

10 வருடத்திற்கு முன்பு இருந்த விலங்குகளின் வேடிக்கைகள் சில ப்ளூ கிராஸ் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தலையீட்டால் தடைபட்டு போனது பார்வையாளர்களுக்கு மிகுந்த வருத்தம் தான். 

 என்ன செய்வது விலங்குகளின் மேல் காட்டும் அன்பை   இன்னும் சக மனிதன் மேல் காண்பிக்க மறுக்கிறோமே!

Monday 20 June 2011

வருமுன் காப்போம் !

          வட இந்தியாவிலிருந்து வேலைக்காக தமிழகம் வந்து குவிகிறது  இளைஞர் கூட்டம். இங்கே வேலை தேடி வருபவர்கள் பெரும்பாலும் கல்யாணமாகாத பிரமச்சாரி இளைஞர்கள்தாம். அவர்கள் தமிழக பெண்கள் மேல் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது அதிகமாகி வருகிறது. குறிப்பாக சிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள் பெருகி வருகிறது. இது செய்தியாக தினந்தோறும் நாளேடுகளில் வந்துகொண்டேதான்  இருக்கிறது.
          
            கோவை மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் சுமார் 5 லட்சம் வட இந்திய வாலிபர்கள் குடியேறி இருக்கிறார்கள். இவர்களில் சிலர் தாங்கள் வசித்த வட இந்திய பகுதிகளில் குற்றம் செய்துவிட்டு தலைமறைவாக இங்கே தஞ்சம் புகுந்தவர்களும் அடக்கம். அது சம்பந்தமாக கைது நடவடிக்கைகளும் அவ்வப்போது அரங்கேறியும் வருகிறது. இவர்களை பற்றிய ஒரு (data base) முழு தகவல் காவல் துறையிடம் இருப்பது நல்லது. ஆனால் அது சம்பந்தமாக எந்த ஒரு நடவடிக்கையும் காவல் துறை எடுத்ததாகத் தெரியவில்லை.

          வாடகைக்கு வீடு தருவோரும் போதிய தகவல் பெறாமலேயே வட இந்தியர்களை குடியமர்த்துகின்றனர்.  இது சம்பந்தமான விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். நல்லவர்களோ, கெட்டவர்களோ யாராக இருந்தாலும் தாங்கள் நடத்தும் நிறுவனங்கள், குடியிருக்கும் பகுதிகள், வீடு வாடகைக்கு விடுவோர் தாமாக ஆர்வமெடுத்து அவர்களை பற்றிய முழு விபரங்களை சேகரித்து அருகில் உள்ள காவல் நிலையங்களில் சமர்ப்பிப்பது நல்லது. அதை காவல் துறையும் வரவேற்கிறது. குற்றங்கள் குறையவும், குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் இந்த தகவல்கள் நிச்சயம் உதவும்.  வந்த பின்பு வருத்த படுவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது.


Sunday 19 June 2011

இன்னும் நல்லா வேகட்டும் சார்!

ஹாய் வண்கம் சென்னாய்!
தமிழை கொலை செய்யவும்
தமிழன் தூக்கத்தை கெடுக்கவும்
மும்பையிலிருந்து 
இறக்குமதி செய்யப்படும்
வெள்ளைத்தோல்   
கோழிகள் குதறும் 
அறிமுக 
வார்த்தைகள்!
தமிழில் ஒரு படம் நடித்தாலே 
தென்னிந்திய மொழிகள்
அனைத்தும் அத்துப்படி 
என
முழு  பூசணிக்காயை 
சோற்றுக்குள்
மறைக்கும் 
அசாத்திய
குருட்டு நம்பிக்கை! 
தமிழன்
பக்கத்துக்கு மாநிலங்களில் 
வந்து பார்க்கவா போகிறான்! 
இவர்களுக்கெல்லாம் 
அம்மா, அப்பா, 
சகோதரன், சகோதரிகள்
இருப்பதேயில்லையா?
தமிழகத்தில்
சிறு குழந்தைகூட
துணி விலகினால் 
ச்சீ என்று
முகம் சுளிக்கும்!
ஆனால் 
இவர்களோ விதி விலக்குகள்!
முழுதாய் கற்றுக்கொள்ளாமல் 
களம் இறங்கியிருக்கும்
களவாணிகள்!
வராத நடிப்பை
விட்டொழித்தால் 
தமிழன் 
காசாவது 
மிச்சப்படுமே! 

ஒரு சாக்கடை நதியாகுமா?

 அம்மாவும் 
அய்யாவும்
மாறி மாறி 
வந்தார்கள் 
அய்யா வந்தால்
அம்மாவை பற்றி  
அவதூறு சொல்வார்!
அம்மா வந்தால் 
அய்யாவை பற்றி 
அபசகுனமாய் பேசி வைப்பார்!
சார்ந்திருந்தோர் 
சந்தோஷம் தவிர 
வேறு ஒன்றுமில்லை!
இம்முறை 
கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறது! 
மாற்றத்தின் அறிகுறியை 
மக்கள் ஏற்படுத்தினர். 
காத்திருப்போம் 
கதவுகள் திறக்குமா என்று!
கனவுகள் நிஜமாகுமா?
கண்ணீர்தான் மிச்சமாகுமா?

Thursday 16 June 2011

இனி பெண் கிடைக்காது!


சிசு கொலைகளை 
சீரிய முறையில் 
நிறைவேற்றியதால்
பெண்கள் 
பிறப்பு சதவீதம் 
பெருமளவு 
குறைந்து போனது!
இனி
பெண் கிடைக்காது !
ஆண்களுக்கு 
ஆண்களே தான்!
இது கூட 
ஒரு வகை 
தண்டனைதான்!
நான் சொல்லவில்லை 
நாளேடுகள் சொல்கின்றன
நாளைய மனிதன் 
மனிதனே அல்ல!
இருக்க வாய்ப்பும் இல்லை!



இங்கே உசத்தி 
வெள்ளை தான்!
கறுப்பு 
கடைசி பட்சம்தான்!
வெள்ளைக்காரன் 
புத்தி 
சதுரங்க 
ஆட்டத்திலும் கூடவா?
வெள்ளை தான் முதலில் 
ஆடவேண்டுமாம்!
நிலவும், மேகமும் 
உயர்வாம் 
அதனால் தான் 
வானத்திலாம்!
அவர்களிடத்தில்  சொல்லுங்கள் 
மேகத்தையும்,நிலவையும் தாண்டி 
இருட்டு வானம் தான்
கருப்பு வானம் தான் 
உயரம் என்று!
வெள்ளையனுக்கு 
வேட்டு வைத்தது 
அந்தக் காலம்!
இனி 
வெள்ளைக்கும்
வேட்டு வைப்போம்!

Tuesday 14 June 2011

யார் பிச்சைக்காரன் ?

பசித்திருந்தான்!
ரொம்பப் பசித்திருந்தான்!
கண்கள் உள்ளே போய்
முதுகு வளைந்து 
நடுங்கிய கைகளில்
அய்யா!
தர்மம் பண்ணுங்கயா!
கேட்டது
அவனிற்கே கேட்டிருக்குமா?
சந்தேகமே!   
நீட்டிய கைகளில்
ஒரு ரூபாய்
நாணயம் 
போட்ட திருப்தியில் 
புண்ணியத்தை நினைத்து!
மனதெங்கும் பெருமிதம்........
நிமிர்ந்து பார்த்தேன்!
சவுக்கால் அடித்தது
உணவக விளம்பரப்பலகை!  
அளவு சாப்பாடு 
விலை ரூ.45  

Monday 13 June 2011

எனது இந்தியா

துர்கை
மாரியம்மன் 
அம்பாள் 
பார்வதி
லட்சுமி
சரஸ்வதி
வள்ளி தெய்வானை
சித்தி புத்தி
ஆண்டாள்
எண்ணிலடங்கா பெண் தெய்வங்கள்
எங்கள் ஊரில்!        
இருந்தும் 
ஒருவரால்  கூட
காப்பாற்ற முடிவதில்லை 
வருடம்தோறும்  
நடக்கும் 

பெண் சிசு கொலைகளை! 
கற்கால மனிதனுக்கு 
இருந்த 
உயர்ந்த எண்ணம்
கற்றவனுக்கு இல்லையே!


 

Sunday 12 June 2011

அண்ணா ஹஜாரே பாபா ராம்தேவ் உங்கள் இருவரை பற்றியும் தென்னிந்தியரான  எங்களுக்குஒன்றுமே தெரியாது. பாபாவிற்கு ஆயிரம் கோடி சொத்து இருப்பதாகவும், அண்ணா ஹஜாரேவும் தன் பிறந்த நாளை லட்ச கணக்கில் செலவு செய்து கொண்டாடியதாகவும் பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. நீங்கள் இருவரும் எது எப்படியோ இலவசமாக விளம்பரம் செய்து பிரபலம் அடைந்து விட்டீர்கள்.  இதனால் மக்களுக்கு ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. ஊழலும் குறைந்தபாடில்லை. ஊழல் செய்வோரும் திருந்தியபாடில்லை.

ரயில் நிலையங்களில்,பேருந்து நிறுத்தங்களில்,
திரையரங்கு வாசல்களில்,
சிக்னலில்,
தெருவெங்கும் பிச்சைக்காரர்கள்

நின்றால்
கையேந்தும் 
சிறார்கள், முதியோர்கள் !
நிமிர்ந்து பார்த்தேன் 
இந்தியா வல்லரசாகிறது 
20   20 
அப்துல் கலாம் அவர்களே
எனக்கு 
கனவு வரவில்லை
அழுகை தான் வருகிறது 
இப்படிப்பட்ட 
இந்தியாவை வைத்துக்கொண்டு 
எவ்வளவு தைரியமாக 
சொன்னீர்கள் !
நிஜம் என் நெஞ்சை அடைக்கிறது!

Friday 10 June 2011

ஆசையை துற!
புத்தன்  சொன்னது.
சொன்ன
சித்தார்த்தன்
ஆசைபட்டதென்னவோ

புத்தன் ஆக!
சொல்லொன்றும், செயலொன்றும்
புதிதல்ல 
நமக்கு!



Thursday 9 June 2011

சொன்னதை செய்!

சொன்னதை செய்!
அறிவிற்கு 
இங்கே 
வேலை இல்லை. 
சொன்னதை செய்....
சிறு வயது முதல் 
ஊட்டி வளர்க்கப்படும் வார்த்தை.
அம்மா! 
எனக்கு இந்த உடை வேண்டாம்.
 சொன்னதை செய்!
அய்யா இந்த கணக்கிற்கு 
விடை இதுவல்ல !
ஆசிரியர் சொன்னது 
சொன்னதை செய்! 
அய்யா! இந்த வியாபாரம்
இலாபம் தராது! 
முதலாளி சொன்னார் 
சொன்னதை செய்!
சொன்னதை செய்!
கேட்டு கேட்டு 
இப்பொழுதெல்லாம் 
சொன்னால்தான் செய்கிறேன் !
சொன்னதை மட்டுமே செய்கிறேன்! 
சொல்லாததை 
யோசிக்க மறந்த மூளை
சொல்வதையும் 
யோசிக்க மறுக்கிறது!

ஊழலை எதிர்ப்பதற்கு முன்பு நீங்கள் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். லஞ்சம் வாங்கியதும் இல்லை. கொடுத்ததும் இல்லை. வெறும் உண்ணாநோன்புகளால் லஞ்சத்தை ஒழித்து விட முடியும் என்றோ ஒரே நாளில் இதற்கு ஒரு தீர்வு கிடைத்து விடும் என்றோ நினைத்து கூட பார்க்க முடியவில்லை. பிறகு என்ன தான் செய்வது? ஊழலை ஒழிக்க ஊழல் எப்படி நடக்கிறது என்று பார்ப்போமா? 
எல்.கே.ஜி வகுப்பிற்கு தன குழந்தைக்கு கண்டிப்பாக இதே பள்ளியில் இடம் கிடைத்தாக வேண்டும் என்கின்ற பெற்றோரின் எண்ணமே முதல் இடமாக ஊழல் பிறப்பதற்கு அமைகிறது. எவ்வளவு வேண்டுமானாலும் காசு கொடுத்து இடம் வாங்கி விட முனைப்பு காண்பிப்பதால் பள்ளிகள் கட்டணத்தை உயர்த்துகின்றன. தனியறையில் பேரம் பேசுகின்றன. உங்கள் குழந்தையை பள்ளியில் சேர்க்க காசு கொடுத்தவரா நீங்கள்.... அப்படியென்றால் உங்களை ஏன் தண்டிக்க கூடாது?  நீங்களும் குற்றவாளிதானே?
அரசாங்கத்தையே குறை சொல்லிகொண்டிருக்கும் மக்கள் தங்களை சுய பரிசோதனை செய்து குறைகளை களைந்து கொள்வது எப்போது? ஊழலை எதிர்க்கும் மக்கள் லஞ்சம் கொடுக்காமல் அல்லவா இருக்க வேண்டும்? தன் மகன், மகள் என்ஜினீயர் அல்லது மருத்துவர் ஆகிவிட எவ்வளவு வேண்டுமானாலும் லஞ்சம் தர தயாராக இருக்கிறார்கள். தருவதால் தானே தனியார் கல்லூரிகளில் கூட்டம் அலை மோதுகிறது. இந்த சுயநல போக்கினால் இவர்கள் மட்டுமல்ல இவர்கள் வளர்த்தும் மகன்,மகள்கள் என்ஜினீயர் அல்லது மருத்துவர் ஆனபின்பு  மக்களிடம் பணம் பறிக்கும் வியாபாரிகளாகவே மாறி விடுகிறார்கள். சேவை துறைகள் வியாபாரம் ஆகும் போது உயிர்களின் மதிப்பு துச்சம் தானே. இப்போது சொல்லுங்கள் யார் திருந்த வேண்டும்? அரசாங்கமா? மக்களா?

Wednesday 8 June 2011

நரகம்

முதலில் தயக்கமாகத்தான் இருந்தது !
நான் மட்டுமே உள்ளே நுழைந்ததாய்........
எதிரில் என் முதலாளி 
பிறகு நண்பன், மனைவி, உறவினர்கள்
அட எல்லோருமே இங்குதானா?
இருந்தாலும் உற்சாகமில்லை....
அட நரகத்திலுமா இவர்கள் !