Wednesday 20 July 2011

நேற்று ஜம்போ சர்கஸ் சென்று இருந்தேன். 

வலிகள் நிறைந்த வாழ்க்கை. ஒருவேளை சாப்பாட்டிற்காக உயிரையே பணயம் வைக்கும் வேலை. மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டுவதே அவர்கள் பிழைப்பு. அவர்கள் வாழ்வே வேடிக்கை. பார்வையாளர்கள் கை தட்டினாலும், தட்டாவிட்டாலும் முகத்தில் புன்முறுவலுடன் தங்கள் திறமையை வெளிப்படுத்துகிறார்கள். சிறிது கூட நடுக்கம் இல்லை. அவசரம் இல்லை. perfection 100 % இருந்தால் மட்டுமே சாத்தியம். 

எத்தனை கலைஞர்கள். எவ்வளவு கட்டு கோப்பான ஒருங்கிணைந்த வேலை. எந்த நிறுவனத்திற்கு சென்றாலும் சாதாரண அலுவலக வேலை செய்வதற்கே ஆள்  கிடைப்பதில்லை, பற்றாக்குறை, வேலையாட்கள் ஒற்றுமையில்லை  என்ற புலம்பல். இங்கோ தலைகீழாக தொங்குவதற்கு கூட ஆட்கள் இருக்கிறார்கள். அசாத்திய திறமைகள். பெண்கள் அதிக சதவிகததில்  இருக்கும் துறை சர்கஸ் மட்டுமாகத்தான் இருக்கும் போலும். சத்தியம் செய்யலாம்.  அந்தரத்தில் அவர்கள் ஆடும்போதெல்லாம் சாகசக்காரிகள் மனதை கொள்ளையடித்தார்கள்.எத்தனை முறை பார்த்தாலும் சாகசங்கள் சலிப்பதில்லை. நாமெல்லாம் வாழ்வதே சாகசம் என்று இருக்கும் போது (விலைவாசி எக்குதப்பா ஏறிடுசுப்பா ) இவர்கள் தங்கள் வாழ்க்கையையே சாகசமாகி கொண்டிருக்கிறார்கள். 

மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இவர்களுக்கு கிடைக்கும் கூலி நிச்சயம் குறைவுதான். ஆனால் அதற்காக  இவர்கள் சாகசத்தில் துளி கூட குறை இல்லை. நெஞ்சம் நினைத்தது நம்மூர் தொழிலாளிகளை பற்றி. 

தனி மனித திறமைகளுக்கு எல்லையே கிடையாது. ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்பு குழுவினர்களுடன் வரிசையாக செல்லும் பாங்கு நம்மவர்கள் இன்னும் கற்றுக்கொள்ள மறுப்பது. செய்யும் வேடிக்கையில் காட்டும் நேர்த்தி ஆஹா நாம் இன்னும் நம் வேலையே நேர்த்தியாக செய்யவேண்டும் என்று எனக்கு உணர்த்தியது.  எல்லாவற்றியும் விட தாங்கள் செய்யும் வேலையை  மகிழ்ச்சியாக செய்கிறார்கள். செய்த வேலை திருப்தி என்கின்ற மன நிறைவை அவர்கள் சொல்ல வேண்டியதில்லை. பார்வையாளர்கள் கைதட்டல்கள் அவர்களை வழியனுப்புகின்றது. நம் பணியில் சாத்தியமா என்று உள்மனது போராடியது.

10 வருடத்திற்கு முன்பு இருந்த விலங்குகளின் வேடிக்கைகள் சில ப்ளூ கிராஸ் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் தலையீட்டால் தடைபட்டு போனது பார்வையாளர்களுக்கு மிகுந்த வருத்தம் தான். 

 என்ன செய்வது விலங்குகளின் மேல் காட்டும் அன்பை   இன்னும் சக மனிதன் மேல் காண்பிக்க மறுக்கிறோமே!