Tuesday, 24 January 2012

திருவள்ளுவரும் விமர்சனதிற்குட்பட்டவரே.


தமிழர்களின் புனித நூலான திருக்குறளை எத்தனையோ பேர் படித்திருப்பர்.
இங்கே நாம் திருக்குறளை புனித நூல் என்று கூறக் காரணம் தமிழ்ச் சான்றோர் அடிக்கடி மேற்கோள் காட்டிப் பேசுவது திருக்குறளைத் தான்.  அதில் எத்தனையோ நல்ல விஷயங்கள் கூறப் பட்டிருக்கின்றது முற்றிலும் உண்மையே. 

எத்தனையோ முறை படித்திருக்கிறேன்....படித்திருக்கிறோம். இம்முறை படித்த போது எழுந்த உறுத்தலே இந்த கேள்வியை எழுதத் தூண்டியது.

கயமை அதிகாரம் 108 இல் 1075 வது குறள்

அச்சமே கீழ்கள  தாசார  மெச்ச 
மவாவுண்டே லுண்டாஞ் சிறிது. 

விளக்கம்:  கீழ் மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணம் அச்சமே.  அதைவிட ஆசையினாலும் சிறிதளவு ஒழுக்கம் உண்டாகும். 

கீழ் மக்கள் என்று வள்ளுவர் யாரை இங்கே வியம்புகிறார்?  தொழிலை வைத்தா? சாதியை வைத்தா? பொருளை வைத்தா? அறிவை வைத்தா? 
ஒரு வேளை அவர் வாழ்ந்த  காலத்தில் சாதியின் தாக்கம் அதிகம் இருந்திருக்குமேயானால் கீழ் சாதியில் பிறந்த ஒருவன் ஒழுக்கத்துடன் வாழ நினைத்திருந்தால் அது எப்படி ஆசையாக இருந்திருக்க முடியும்? 

ஒழுக்கம் என்பது மேல்வர்க்கத்திற்கு மட்டுமே உரித்தானதா என்ன? 
கீழ் சாதிக்காரன் எல்லோருமே ஒழுக்கக் கேடானவர்களா? 
இதிலிருந்தே தெரியவில்லையா?  அன்றைய கால கட்டத்தில் வள்ளுவரும் சாதீயம் பார்த்திருக்கிறார். சாதீயம் பார்த்த ஒருவரின் எழுத்துக்களை  திராவிட கட்சிகள் கூட மேற்கோள் காட்டிப் பேசுவது விந்தைக்குரியது தானே. ஒருவேளை திராவிடக் கட்சிக்காரர்கள் திருக்குறளை முழுமையாகப் படிக்க வில்லையா?

ஒழுக்கத்திற்கும் அச்சத்திற்கும் என்ன சம்பந்தம்? ஒருவன் மது அருந்தாமல் அல்லது ஒழுக்கக் கேடாக இல்லாமல் இருந்தால் அது அவன் உடம்பிற்கும் நல்லது. அவனை நம்பியிருக்கும் குடும்பத்திற்கும் நல்லது.  மது அருந்தாமை அவனுக்குள்ள விழிப்புணர்வே அன்றி அச்சத்தினால் அல்ல? இது எப்படி திருவள்ளுவரின் பார்வையில் அச்சமானது? ஆசையானது? ஒருவேளை நான் புரிந்துகொண்டது தவறோ?