பல கோடி ரூபாய் போட்டு படம் எடுக்கிறார்கள். வெறும் நூறு ரூபாயில் படம் பார்த்து விட்டு அதற்கு விமர்சனம் எழுதுவது தவறு என்றே படுகிறது. அதுவும் தவிர சினிமா பற்றிய பல கருத்துக்கள். இது தான் நல்ல சினிமா என்பதற்கு ஏகப்பட்ட பார்முலாக்கள். ஹாலிவுட் படங்கள் மாதிரி தமிழ் படங்கள் இல்லை என்று வேறு. இல்லை இல்லை இது தான் எங்கள் கலாச்சாரம் என்று சப்பைக்கட்டு சொல்லும் ஒரு கோஷ்டி. தலை சிறந்த இயக்குனர்கள் மட்டுமே படங்களை விமர்சனம் செய்ய வேண்டும் என்பது எனது கருத்து. அது சரி யார் அந்த இயக்குனார்கள்? இந்த இயக்குனர் எப்படி என் படங்களை விமர்சனம் செய்யலாம்? அவர் எடுத்த படங்களின் இலட்சணம் தெரியாதா என்று படம் எடுத்தவர் குமுறலாம். ஒரு வேளை ரசிகர்கள் மட்டுமே படங்களை விமர்சனம் செய்யலாம் என்று விட்டு விடலாமா? ஏன் என்றால் ஒரு படத்தை ஆராதித்து ஓட வைக்கும் தகுதியும் அதை ஒரே வாரத்தில் திரை அரங்கை விட்டு தூக்கும் சக்தியும் சாமானிய ரசிகனுக்கே உள்ளது.